Thursday 29 December 2016

உருத்திராட்சம் எல்லோரும் அணியலாமா ?
சிவபெருமானின் கண்களில் தோன்றிய நீரே உருத்திராட்சமானது. அதை அணிபவரை அவர் தன் கண் போல காப்பாற்றுவார். ஆகவே, கண்டத்தில் மணியாகும் உருத்திராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவர் வரை, ஆண் பெண் என இரு பாலரும் தாராளமாக அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்தே இருக்கலாம்.
சிகப்பு நூலினால் (சக்தி) 5 முக உருத்திராட்சத்தை (சிவன்) கோர்த்து, உருத்திராட்சத்தின் இரு பக்கமும் ஓர் முடிச்சு போட்டு கழுத்தில் தொங்குமாறும் (சிவசக்தியாக) வெளியே தெரியுமாறும் 3 முடிச்சு போட்டு அணிய வேண்டும்.இந்த முடிச்சு பின் பக்கமோ, வலது தோள் பக்கமோ இருக்க வேண்டும்.
இந்த உருத்திராட்சத்தை ஒருபோதும் எக்காரணம் கொண்டும் கழற்றவே கூடாது. நம்மோடு கூடவே இருந்து நாம் சிவனடி சேரும் வரை நம் கூடவே வரவேண்டும்.
ஆலகால விடத்தை சிவபெருமானார் தம் கழுத்தில் தங்க வைத்து உயிர்களைக் காத்ததை குறிக்கும் பொருட்டே கண்டமணி அணிகிறோம். இயற்கையாகவே நம் கழுத்து பகுதியில் விஷத்தை முறிவு செய்யும் காரணிகள் உள்ளன. ஆதிபராசக்தி தன் உடல் முழுவதும் திருநீறும் உருத்திராட்சமும் அணிந்து கொண்டதாக அருணாசலபுராணம் கூறுகிறது. ஆகவே, பெண்கள் எல்லோரும் எல்லா சமயங்களிலும், விலகி இருக்கும் நாட்களிலும் கண்டிப்பாக தவறாது அணிந்திருக்கலாம்.
நீத்தார் கடன், பெண்கள் தீட்டு, கணவன் மனைவி தாம்பத்திய நேரம் என்று எல்லா நேரங்களிலும் தவறாமல் கண்டமணியை அணிந்திருக்கலாம். கண்டமணி அணிந்து கொண்டு நீங்கள் எப்போதும் போல வாழ்கையை மேற்கொண்டிருங்கள்.
உருத்திராட்சம் அணிபவர்கள் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் ஆகியவற்றைப் படிப்படியாக விட்டு விட முயற்சிக்க வேண்டும். முக்கியமாக மாடு, பன்றி மாமிசத்தை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.
உருத்திராட்சம் அணிவதால் மனமும் உடலும் தூய்மை அடையும். இதை அணிந்த பின்னர் எந்த துர் சக்தியும், தீய சக்தியும் உங்களை அண்டாது. உருத்திராட்சம் ஒரு சிவ கவசமாக இருக்கும். நீராடும் போது, கண்டமணியில் பட்டு வரும் நீர் கங்கைக்கு சமமாகும். சிறுவர்களுக்கு நல்ல படிப்பு திறனும், கவன ஒருமை, ஞாபக சக்தியும் கிடைக்கும். பெண்களுக்கு அனைத்து செல்வங்களும் உறுதியான தாலி பாக்கியமும் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். என்ன கிடைக்காது உருத்திராட்சம் அணிபவர்களுக்கு ? உருத்திராட்சம் அணிந்தவர்களுக்கு இந்த பிறவியில் செல்வமும், உடல் நலனும், இன்பமான வாழ்கையும் கிடைத்து இறுதியில் முக்திபேறும் கிடைக்கும். உருத்திராட்சத்திற்கு இயற்கையாகவே மருத்துவ குணங்களான இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும், உடலின் வெப்பத்தை சீராக வைத்திருக்கும் தன்மையும் உள்ளது.
உருத்திராட்சம் அணிந்து நெற்றி நிறைய நீறு பூசி, பஞ்சாட்சர ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்பவர்களுக்கு சிவபெருமானார் கூடவே இருந்து வேண்டியவற்றை செய்வார். உருத்திராட்சம் அணிய சிலர் தயங்குகிறார்கள். இந்த தயக்கம் தேவையற்றது. யார் வேண்டுமானாலும் கண்டமணி அணியலாம். உருத்திராட்சத்தை மாலையாக அணியும் போது தான் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் நிறைய இருக்கின்றன. சிவதொண்டு செய்யும் போதும், சிவாலய தரிசனம் செய்யும் போதும், சிவ பூசை செய்யும் போதும் யாரும் உருத்திராக்க மாலை அணியலாம்.
ஆகவே, இன்னும் ஏன் தயக்கம் ? இன்றே உருத்திராட்சம் அணியுங்கள். உங்கள் மனைவி, குழந்தைகளுக்கும் அணிவியுங்கள். உங்கள் வீட்டு கால்நடைகளுக்கும் வாகனத்திலும் உருத்திராட்சத்தை அணிவிக்கலாம். உருத்திராட்சத்தை அணிந்து, நெற்றி நிறைய திருநீறணிந்து பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய, சிவாயநம சொல்லுவார்க்கு ஒரு தீங்கும் நெருங்கவே நெருங்காது.

No comments:

Post a Comment